இயற்கை கவிதை 10 வரிகள் -கவிதைகள் – Tamil kavithaigal
கூட்டுக்குடும்பம்
ஓங்கி வளர்ந்த ஒற்றை
பனைமரத்தில் கூட்டமாய் வாழும்
தூக்கணாங்குருவிகள்…
துக்கணாங்குருவிகளிடமிருந்து,
நாம் கற்போம் கூட்டுக்குடும்பத்தின்
அருமையை…
சாதனை
சாதனைகள் யாவும்
சாதாரனமானவை அல்ல…
ஓரிரு நாட்களில் பெற அவை
ஒன்றும் ஊறுகாய் அல்ல…
பல நாட்களின், பல மாதத்தின் , பல ஆண்டின்
சுதந்திரக் காற்று
பலனே சாதனை… கடின உழைப்பின் பெயரே சாதனை…
உனக்கான வாழ்க்கையை மட்டும்
நீ வாழ்க…
பிறரது வாழ்க்கையையும் சேர்த்து
வாழ நினைக்காதே…
உனக்கான சுவாசக்காற்றை மட்டும்
நீ சுவாசி…
பிறரது சுவாசக்காற்றையும் சுவாசிக்க
நினைக்காதே…
சுதந்திர இந்தியாவில் மகிழ்ச்சியாக வாழ்க…
பிறரையும் வாழவிடு…
சுதந்திர காற்றை அவர்களும்
சுவாசிக்கட்டும்…
சுதந்திரம்
இந்திய மண்ணில் சுதந்திரக் காற்று
வீசுகிறது என்றால்,
அதற்கு முழு காரணம் இந்த மண்ணில் விளைந்த
மண்ணின் மைந்தர்களே…
அவர்கள் தேர்ந்தெடுத்தது கடினப் பாதையை,
நமக்கு அவர்கள் உருவாக்கித் தந்தது சுதந்திர இந்தியாவை…
அவர்கள் பாடுபட்டு வாங்கித் தந்த ,சுதந்திரத்தை நாம் போற்றி பாதுகாப்போம்…
சுமை
விவசாயத்திற்காக வாங்கினான்
வங்கியில் கடன்…
பயிர் வளர்ந்து இரு மடங்கு
பலன் அளிக்கும் முன்னரே
கடன் சுமை
பத்து மடங்கானது…
செம்மை
காட்டைச் சீர்ப்படுத்தி
நாடாக உருவாக்கினான்…
ஒலியைச் சீர்ப்படுத்தி
மொழியாக உருவாக்கினான்…
ஒழுக்கத்தைச் சீர்ப்படுத்தி
பண்பாட்டை உருவாக்கினான்…
சமூக ஏற்றத்தாழ்வுகளைசீர்ப்படுத்த யார் வருவார்?
சோம்பேறி
ஆயிரம் ஏடுகளைத் திருப்பிய
போது கிடைக்காத
மகிழ்ச்சி, அந்த ஏடுகள்
முடிந்தபின் கிடைத்ததுஏனோ- சோம்பேறி…
தாயுள்ளம்
தன்னை நாடி வருபவரையும்,
மனம் வாடாமல் வழி,
அனுப்ப வேண்டும் என்று,
நினைத்த உயர்ந்த உள்ளம் கொண்டவர்,
கர்மவீரர் காமராசர்…….
தாயைப் போன்றது
பிற மொழிகளைப் படிப்பது
பிழையொன்றும் இல்லையே…
நமக்கு எவ்வளவு வயதாக இருந்தாலும்,
நமது பெற்றோர்க்கு நாம் குழந்தையே…
அதுபோல, எவ்வளவு மொழிகள் நாம்
கற்றிருந்தாலும் நமது தாய்மொழி தமிழே…
தாயைப் போற்றுவது போல, தாய்மொழியையும் போற்றுவோம்…
துயர் போக்குவோம்
விதை விதைத்து விட்டு மழையைப் பார்த்தான்
மழை பெய்யவில்லை…
ஏரி, குளங்களைப் பார்த்தான்
அவையும் வற்றிய நிலையில்…
உதவி செய்வார் வருவார் என்று நினைத்தான்…
சில பண முதலைகளின் உள்ளங்களிலோ
ஈரமில்லை…
விவசாயிகளின் துயர் போக்க வாரீர்…
தைரியம்
சின்ன தீப்பெட்டிக்குள் காட்டையே
எரிப்பதற்கான ஆயுதம் உண்டு…
அதுபோல நம் சின்ன மனதிற்குள் நாட்டையே
வெல்வதற்கான ஆயுதம் உண்டு…
அதுதான் தைரியம்…
நட்பின் பிரிவு
நான் வானைப் பார்த்தேன் –அதில்
நிலவாய்த் தெரிந்தாய்!
நான் கடலைப் பார்த்தேன் –அதில்
அலையாய்த் தெரிந்தாய்!
நான் மலரைப் பார்த்தேன் –அதில்
வாசமாக இருந்தாய்!
நான் மனிதனைப் பார்த்தேன்–அதில்
ஆனந்தமான நாட்களாயிருந்தாய்!
இவையெல்லாம் ஒரு நாள் மறைந்துவிடும்
என்பதால் தான் நீயும்
என்னைவிட்டுப் பிரிந்தாயோ!
தோழியே!
நாட்கள் மறையலாம் உன் ஞாபகம்
என்றும் மறைவதில்லை…
நாட்டைக் காக்கும் நாடகம்
பழந்தமிழரின் பண்பாட்டைக் காக்கும் மூலாதாரமே!
அதனை மேன்மேலும் வளரச் செய்யும் வாழ்வாதாரமே!
முத்தமிழில் தலையாய பெருமை உனக்கு!
இயல், இசை இரண்டும் உனக்குள் இருக்கு!
வரலாற்றை அறிந்தோம் வெறும் கதையாக!
அதற்கு உணர்வு கொடுத்தாய் அழகின் வடிவாக!
கதாபாத்திரங்கள் இறந்தார்கள் மண்ணோடு மண்ணாக!
அவர்களுக்கு உயிர்கொடுத்தாய் மண்ணனின் முன்னாக!
முன்பு வேத்தியல், பொதுவியல் என்று இருவகையாம்!
இன்று நீ அனைவரின் பொதுவுடைமையாம்!
நீ மக்கள் மனதில் பெற்றது நீங்காப் பெருமையை!
நாடு அறியும் உனது அருமையை!
உன்னால் வேத இதிகாசங்கள் பெற்றது மறுமலர்ச்சி!
அவற்றால் நாங்கள் அடைந்தோம் பெரு மகிழ்ச்சி!
உன்னால் இளைஞர்கள் சென்றார்கள் நல்லபாதையில்!
அவர்களை மேன்மேலும் நெறிப்படுத்துவாய் உன் கதையால்!
நித்திரை
நித்திரையில் வந்தது கனா…
சித்திரையில் வேலை கிடைப்பது போல…
கனா கனவாகவே கலைந்துப்போக…
படிப்புகேற்ற வேலை இல்லை…
ஊழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லை…
நிறைவில்லா மனம்…
குறையாத கடன்…
பெருகாத சம்பளம்…
விலையேறும் பொருட்கள்…
அவற்றை…
வாங்க முடியாத நிலை…
எப்படி பிழைப்போம்…
நாங்கள் வாழும் வாழ்வே கானல் நீரோ… எங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியோ!
நின்று வெல்லும்
தமிழ் இனி மெல்லச் சாகும்
என்றுக் கூறியவர் அறியாமை
இருளில் வாழ்பவரே!
தமிழ் இனி நின்று சாதிக்கும்!
தமிழர்களுக்கு பிறப்பும் , இறப்பும் உண்டு…
தமிழுக்கு பிறப்பும் , இறப்பும் இல்லை…
தமிழ் என்றும் நிலையானது…
அந்த வானத்தைப் போல…
நீங்காத ஞாபகம்
சலசலவென ஓடும் ஆறு…
தகதகவென மின்னும் சூரிய ஒளி…
பச்சைபசேலென எங்கும் வயல்…
கூகூவென குயில்கள் கூவும் ஒலி…
கடகடவென ஓடும் மாட்டுவண்டி…
கருகருவென கார் மேகம்…
பளபளவென நட்சத்திர ஒளி…
விறுவிறுவென நாட்கள் ஓடினாலும்
இவையாவும் நம் நினைவில்…
பள்ளம்
பிறரை வீழ்த்துவதற்கு பள்ளத்தைத்
தோண்டாதே!
நீயே! அதில் தவறி விழ நேரிடும்!
பிறருக்காக வலை விரிக்காதே!
நீயே! அதில் மாட்ட நேரிடும்!
பாசத்தைக் காட்டிய பயிர்
பிஞ்சுக் குழந்தை மண்ணைத் தொடும்
வேளையில் ஏற்பட்ட மகிழ்ச்சியைவிடப்
பெரியது…
பச்சைப் பயிர் முளைத்து வருவதைக்
காண்கையில்…
இராப்பகலாக பாதுகாத்த பயிர்…
இரத்தததைத் தண்ணீராக ஊற்றி வளர்த்த பயிர்…
அது வெறும் பயிர் மட்டுமல்ல
எந்தன் உயிர்…
பாவை
பாவையானவள் ஆடவர் ஆட்டிப்படைக்கும்
கைபொம்மை இல்லை…
வளியைப் போன்றவள் அவள் யார் கையிலும்
சிக்கமாட்டாள்…
நதியைப் போன்றவள் அவள் பல தடைகளைக்
கடப்பாள்…
மதியைப் போன்றவள் அவள் சிறைப்பிடிக்க எண்ணனாள் சுட்டெரிப்பாள்…
துணிந்தெழு மாதரே…
உனது வலிமையை நீ அறிவாய்… பிறரையும் அறியச் செய்…
புதியதோர் விதி செய்வோம்
அரசுப்பள்ளியில் படித்தவன்
முன்னேற முடியாது
என்ற நிலையை மாற்றுவோம்…
ஆங்கிலம் பேச முடியாது
என்ற நிலையை மாற்றுவோம்…
ஆங்கிலம் என்பது ஒரு மொழியே…
மொழியின் பயன் யாது?
கருத்தை பரிமாறிக் கொள்ள உதவுவது…
நம் செம்மொழியாம் தாய்மொழி
இருக்க கவலை ஏன்?
தமிழ்வழியில் படித்து வாழ்க்கையில்
முன்னேறியவர் பலர்…
செலவோம் அவர்கள் வழியில்…
போற்றுவோம் நம் மொழியை…
பொது
இயற்கையாய் அமைந்த
ஆர்ப்பரிக்கும் கடல் அனைவருக்கும்
பொதுவானது…
பரந்து விரிந்த வானம் அனைவருக்கும்
பொதுவானது…
உருவம் இல்லா காற்ற அனைவருக்கும்
பொதுவானது…
இந்த வரிசையில் மனிதனால்
உருவாக்கப்பட்ட திருக்குறளும்
இனம், சாதி, மொழி, நாடு கடந்து
அனைவருக்கும் பொதுவானது…
பொற்காலம்
கல்லில் ஒளிந்திருக்கும் சிலையைக்
கண்டுபிடிப்பதைப் போல…
மானிடரின் உள்ளே ஒளிந்திருக்கும்
திறமையை அறிந்து…
அவர்களுக்கு,
பொன் கொடுத்து, பொருள் கொடுத்து,
விருந்தளித்து,
அரியணையில் அமர இடமளித்து,
புகழ் செய்தது அந்தக்காலம், அதுவே பொற்காலம்..
ஆனால், இன்றோ…
பணமிருப்பவனே பெரியவன்…
அவன் வார்த்தைகளே பெரியது…
இதுவும் பொற்காலம் தான் இருப்பவனுக்கு…
இல்லாதவனுக்கு எப்போது வரும் பொற்காலம்?
பொன்மணிகள்
விளைநிலத்தில் விளையும் நெற்பயிர்
வெறும் நெல்மணிகள் அல்ல…
அவை, விவசாயிகள் பெற்றெடுத்த
கண்ணின் மணிகள்….
ஆ. கீர்த்திகா., M.A.,M.phil.,N.E.T.,
இதையும் படிக்கலாமே
சிறந்த தமிழ் கவிதைகள் – கவிதைகள் தமிழில் – Kavithaigal in tamil