அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடல்கள் lyrics -Thirupugal Lyrics in Tamil
திருப்புகழ் முதல் பாடல்
பாடல்-1
கைத்தல நிறை கனி அப்பமொடு அவல் பொரி கப்பிய கரி முகன் அடி பேணி
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ கற்பகம் என வினை கடிது ஏகும்
மத்தமும் மதியமும் வைத்திடும் அரன் மகன் மல் பொரு திரள் புய மத யானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டு அவிழ் மலர் கொடு பணிவேனே
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே
முப்புரம் எரி செய்த அ சிவன் உறை ரதம் அச்சு அது பொடி செய்த அதி தீரா
அ துயர் அது கொடு சுப்பிரமணி படும் அ புனம் அதனிடை இபம் ஆகி
அ குறமகளுடன் அ சிறு முருகனை அ கணம் மணம் அருள் பெருமாளே
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடல்கள் lyrics
பாடல்-2
பக்கரை விசித்திர மணி பொன் கலணை இட்ட நடை பட்சி எனும் உக்ர துரகமும் நீப
பக்குவ மலர் தொடையும் அ குவடு பட்டு ஒழிய பட்டு உருவ விட்டு அருள் கை வடி வேலும்
திக்கு அது மதிக்க வரு குக்குடமும் ரட்சை தரும் சிற்று அடியும் முற்றிய பன்னிரு தோளும்
செய்ப்பதியும் வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு செப்பு என எனக்கு அருள் கை மறவேனே
இக்கு அவரை நல் கனிகள் சர்க்கரை பருப்புடன் நெய் எள் பொரி அவல் துவரை இள நீர் வண்டு
எச்சில் பயறு அப்ப வகை பச்சரிசி பிட்டு வெள்ளரி பழம் இடி பல் வகை தனி மூலம்
மிக்க அடிசில் கடலை பட்சணம் என கொள் ஒரு விக்கிந சமர்த்தன் என்னும் அருள் ஆழி
வெற்ப குடில சடில வில் பரமர் அப்பர் அருள் வித்தக மருப்பு உடைய பெருமாளே
Thirupugal Lyrics in Tamil
பாடல்-3
உம்பர் தரு தேநு மணி கசிவாகி ஒண் கடலில் தேனமுதத்து உணர்வூறி
இன்ப ரசத்தே பருகி பலகாலும் என்றன் உயிர்க்கு ஆதரவுற்று அருள்வாயே
தம்பிதனக்காக வனத்து அணைவோனே தந்தை வலத்தால் அருள் கை கனியோனே
அன்பர்தமக்கான நிலை பொருளோனே ஐந்து கரத்து ஆனைமுக பெருமாளே
பாடல்-4
நினது திருவடி சத்தி மயில் கொடி நினைவு கருதிடு புத்தி கொடுத்திட
நிறைய அமுது செய் முப்பழம் அப்பமும் நிகழ் பால் தேன்
நெடிய வளை முறி இக்கொடு லட்டுகம் நிற வில் அரிசி பருப்பு அவல் எள் பொரி
நிகரில் இனி கதலி கனி வர்க்கமும் இளநீரும்
மகிழ்வொடு தொடு அட்ட கரத்து ஒரு மகர சலநிதி வைத்த துதி கர
வளரும் கரி முக ஒற்றை மருப்பனை வலமாக
மருவு மலர் புனை தொத்திர சொல் கொடு
வளர் கை குழை பிடி தொப்பணம் குட்டொடு
வனச பரி புர பொன் பத அர்ச்சனை மறவேனே
தெனன தெனதென தெத்தென அன பல சிறிய அறு பதம் மொய்த்து உதிர புனல்
திரளும் உறு சதை பித்த நிண குடல் செறி மூளை
செரும உதர நிரப்பு செரு குடல் நிரைய அரவ நிறைத்த களத்து இடை
திமித திமிதிமி மத்தள இடக்கைகள் செகசேசே
எனவே துகுதுகு துத்தென ஒத்துகள் துடிகள் இடி மிக ஒத்து முழக்கிட
டிமுட டிமுடிமு டிட்டிம் என தவில் எழும் ஓசை
இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட இரண பயிரவி சுற்று நடித்திட
எதிரு நிசிசரரை பெலியிட்டு அருள் பெருமாளே
பாடல்-5
விடம் அடைசு வேலை அமரர் படை சூலம் விசையன் விடு பாணம் எனவே தான்
விழியும் அதி பார விதமும் உடை மாதர் வினையின் விளைவு ஏதும் அறியாதே
கடி உலவு பாயல் பகல் இரவு எனாது கலவிதனில் மூழ்கி வறிதாய கயவன்
அறிவு ஈனன் இவனும் உயர் நீடு கழல் இணைகள் சேர அருள்வாயே
இடையர் சிறு பாலை திருடிக்கொடு போக இறைவன் மகள் வாய்மை அறியாதே
இதயம் மிக வாடி உடைய பிளை நாத கணபதி எனு நாமம் முறை கூற
அடையலவர் ஆவி வெருவ அடி கூர அசலும் அறியாமல் அவர் ஓட
அகல்வது எனடா சொல் எனவும் முடி சாட அறிவு அருளும் முகவோனே
பாடல்-6
முத்தை தரு பத்தி திரு நகை அத்திக்கு இறை சத்தி சரவண முத்திக்கு ஒரு வித்து குருபர என ஓதும்
முக்கண் பரமற்கு சுருதியின் முற்பட்டது கற்பித்து இருவரும் முப்பத்து மூ வர்க்கத்து அமரரும் அடி பேண
பத்து தலை தத்த கணை தொடு ஒற்றை கிரி மத்தை பொருது ஒரு பட்டப்பகல் வட்ட திகிரியில் இரவாக
பத்தற்கு இரதத்தை கடவிய பச்சை புயல் மெச்ச தகு பொருள் பட்சத்தொடு ரட்சித்து அருள்வதும் ஒரு நாளே
தித்தித்தெய ஒத்த பரிபுர நிர்த்த பதம் வைத்து பயிரவி திக்கு ஒட்க நடிக்க கழுகொடு கழுது ஆட
திக்கு பரி அட்ட பயிரவர் தொக்குத்தொகு தொக்கு தொகுதொகு சித்ர பவுரிக்கு த்ரி கடக என ஓத
கொத்து பறை கொட்ட களம் மிசை குக்குக்குகு குக்கு குகுகுகு குத்தி புதை புக்கு பிடி என முது கூகை
கொட்புற்று எழ நட்பு அற்ற அவுணரை வெட்டி பலி இட்டு குலகிரி குத்துப்பட ஒத்து பொர வல பெருமாளே
பாடல்-7
அருக்கு மங்கையர் மலர் அடி வருடியெ கருத்து அறிந்து பின் அரைதனில் உடைதனை
அவிழ்த்தும் அங்கு உள அரசிலை தடவியும் இரு தோளுற்று
அணைத்தும் அங்கையின் அடிதொறும் நகம் எழ உதட்டை மென்று பல் இடு குறிகளும்
இட அடி களம்தனில் மயில் குயில் புறவு என மிக வாய் விட்டு
உருக்கும் அங்கியில் மெழுகு என உருகிய சிரத்தை மிஞ்சிடும் அநுபவம் உறு பலம்
உற கையில் கனி நிகர் என இலகிய முலை மேல் வீழ்ந்து
உரு கலங்கி மெய் உருகிட அமுது உகு பெருத்த உந்தியில் முழுகி மெய் உணர்வு அற
உழைத்திடும் கன கலவியை மகிழ்வது தவிர்வேனோ
இருக்கு மந்திரம் எழு வகை முநி பெற உரைத்த சம்ப்ரம சரவணபவ குக
இதத்த இங்கிதம் இலகிய அறுமுக எழில் வேள் என்று
இலக்கணங்களும் இயல் இசைகளும் மிக விரிக்கும் அம் பல மதுரித கவிதனை
இயற்று செந்தமிழ் விதமொடு புய மிசை புனைவோனே
செருக்கும் அம்பல மிசை தனில் அசைவுற நடித்த சங்கரர் வழிவழி அடியவர்
திரு குருந்தடி அருள்பெற அருளிய குரு நாதர்
திரு குழந்தையும் என அவர் வழிபடு குருக்களின் திறம் என வரு பெரியவ
திருப்பரங்கிரிதனில் உறை சரவண பெருமாளே
பாடல்-8
உனை தினம் தொழுதிலன் உனது இயல்பினை உரைத்திலன் பல மலர் கொடு உன் அடி இணை
உற பணிந்திலன் ஒரு தவம் இலன் உனது அருள் மாறா
உளத்து உள் அன்பினர் உறைவிடம் அறிகிலன் விருப்பொடு உன் சிகரமும் வலம் வருகிலன்
உவப்பொடு உன் புகழ் துதி செய விழைகிலன் மலை போலே
கனைத்து எழும் பகடு அது பிடர் மிசை வரும் கறுத்த வெம் சின மறலி தன் உழையினர்
கதித்து அடர்ந்து எறி கயிறு அடு கதை கொடு பொரு போதே
கலக்குறும் செயல் ஒழிவு அற அழிவுறு கருத்து நைந்து அலமுறும் பொழுது அளவை கொள்
கணத்தில் என் பயம் அற மயில் முதுகினில் வருவாயே
வினை தலம்தனில் அலகைகள் குதி கொள விழுக்கு உடைந்து மெய் உகு தசை கழுகு உண
விரித்த குஞ்சியர் எனும் அவுணரை அமர்புரி வேலா
மிகுத்த பண் பயில் குயில் மொழி அழகிய கொடிச்சி குங்கும முலை முகடு உழு நறை
விரைத்த சந்தன ம்ருகமத புய வரை உடையோனே
தினம் தினம் சதுர்மறை முநி முறை கொடு புனல் சொரிந்து அலர் பொதிய விணவரொடு
சினத்தை நிந்தனை செயு முநிவரர் தொழ மகிழ்வோனே
தென தெனந்தன என வரி அளி நறை தெவிட்ட அன்பொடு பருகு உயர் பொழில் திகழ்
திருப்பரங்கிரிதனில் உறை சரவண பெருமாளே
பாடல்-9
கரு அடைந்து பத்துற்ற திங்கள் வயிறு இருந்து முற்றி பயின்று
கடையில் வந்து உதித்து குழந்தை வடிவாகி
கழுவி அங்கு எடுத்து சுரந்த முலை அருந்துவிக்க கிடந்து
கதறி அங்கை கொட்டி தவழ்ந்து நடமாடி
அரை வடங்கள் கட்டி சதங்கை இடு குதம்பை பொன் சுட்டி தண்டை
அவை அணிந்து முற்றி கிளர்ந்து வயது ஏறி
அரிய பெண்கள் நட்பை புணர்ந்து பிணி உழன்று சுற்றித்திரிந்தது
அமையும் உன் க்ருபை சித்தம் என்று பெறுவேனோ
இரவி இந்தரன் வெற்றி குரங்கின் அரசர் என்றும் ஒப்பற்ற உந்தி
இறைவன் எண்கு இன கர்த்தன் என்றும் நெடு நீலன்
எரியது என்றும் ருத்ரன் சிறந்த அநுமன் என்றும் ஒப்பற்ற அண்டர்
எவரும் இந்த வர்க்கத்தில் வந்து புனம் மேவ
அரிய தன் படை கர்த்தர் என்று அசுரர் தம் கிளை கட்டை வென்ற
அரி முகுந்தன் மெச்சுற்ற பண்பின் மருகோனே
அயனையும் புடைத்து சினந்து உலகமும் படைத்து பரிந்து
அருள் பரங்கிரிக்குள் சிறந்த பெருமாளே
பாடல்-10
கறுக்கும் அஞ்சன விழி இணை அயில் கொடு நெருக்கி நெஞ்சு அற எறி தரு பொழுது ஒரு
கனிக்குள் இன் சுவை அமுது உகும் ஒரு சிறு நகையாலே
கள கொழும் கலி வலை கொடு விசிறியெ மனைக்கு எழுந்திரும் என மனம் உருக ஒர்
கவற்சி கொண்டிட மனைதனில் அழகொடு கொடு போகி
நறைத்த பஞ்சு அணை மிசையினில் மனம் உற அணைத்த அகம் தனில் இணை முலை எதிர்
பொர நகத்து அழுந்திட அமுது இதழ் பருகியும் மிடறூடே
நடித்து எழும் குரல் குமுகுமுகுமு என இசைத்து நன்கொடு மனம் அது மறுகிட
நழுப்பு நஞ்சன சிறுமிகள் துயர் அற அருள்வாயே
நிறைத்த தெண் திரை மொகுமொகுமொகு என உரத்த கஞ்சுகி முடி நெறுநெறுநெறு என
நிறைத்த அண்ட முகடு கிடுகிடு என வரை போலும்
நிவத்த திண் கழல் நிசிசரர் உரமொடு சிர கொடும் குவை மலை புர தர இரு
நிண குழம்பொடு குருதிகள் சொரிதர அடு தீரா
திறல் கரும் குழல் உமையவள் அருள் உறு புழைக்கை தண் கட கய முக மிக உள
சிவ கொழுந்து அன கணபதியுடன் வரும் இளையோனே
சினத்தொடும் சமன் உதை பட நிறுவிய பரற்கு உளம் அன்புறு புதல்வ நன் மணி உகு
திருப்பரங்கிரிதனில் உறை சரவண பெருமாளே
சிறந்த திருப்புகழ் பாடல் வரிகள்
பாடல்-11
கனகம் திரள்கின்ற பெரும் கிரிதனில் வந்து தகன்தகன் என்றிடு
கதிர் மிஞ்சிய செண்டை எறிந்திடு கதியோனே
கடம் மிஞ்சி அநந்த விதம் புணர் கவளம்தனை உண்டு வளர்ந்திடு
கரியின் துணை என்று பிறந்திடு முருகோனே
பனகம் துயில்கின்ற திறம் புனை கடல் முன்பு கடைந்த பரம்பரர்
படரும் புயல் என்றவர் அன்பு கொள் மருகோனே
பல துன்பம் உழன்று கலங்கிய சிறியன் புலையன் கொலையன் புரி
பவம் இன்று கழிந்திட வந்து அருள்புரிவாயே
அனகன் பெயர் நின்று உருளும் திரிபுரமும் திரி வென்றிட இன்புடன்
அழல் உந்த நகும் திறல் கொண்டவர் புதல்வோனே
அடல் வந்து முழங்கி இடும் பறை டுடுடுண்டுடு டுண்டுடு டுண்டு என
அதிர்கின்றிட அண்டம் நெரிந்திட வரு சூரர்
மனமும் தழல் சென்றிட அன்று அவர் உடலும் குடலும் கிழி கொண்டிட
மயில் வென்தனில் வந்து அருளும் கன பெரியோனே
மதியும் கதிரும் தடவும்படி உயர்கின்ற வனங்கள் பொருந்திய
வளம் ஒன்றும் பரங்கிரி வந்து அருள் பெருமாளே
பாடல்-12
காது அடரும் கயல் கொண்டு இசைந்து ஐம்பொறி வாளி மயங்க மனம் பயம் தந்து இருள்
கால் தரவும் இந்து விசும்பில் இலங்கும் பொழுது ஒரு கோடி
காய் கதிர் என்று ஒளிர் செம் சிலம்பும் கணையாழியுடன் கடகம் துலங்கும்படி
காமன் நெடும் சிலை கொண்டு அடர்ந்தும் பொரு மயலாலே
வாதுபுரிந்து அவர் செம் கை தந்து இங்கிதமாக நடந்தவர் பின் திரிந்தும் தன
மார்பில் அழுந்த அணைந்திடும் துன்பம் அது உழலாதே
வாசம் மிகுந்த கடம்பம் மென் கிண்கிணி மாலை கரம் கொளும் அன்பர் வந்து அன்பொடு
வாழ நிதம் புனையும் பதம் தந்து உனது அருள்தாராய்
போதில் உறைந்து அருள்கின்றவன் செம் சிரம் மீது தடிந்து விலங்கிடும் புங்கவ
போத வளம் சிவ சங்கரன் கொண்டிட மொழிவோனே
பூகம் உடன் திகழ் சங்கு இனம் கொண்ட கிரீவம் மடந்தை புரந்திரன் தந்து அருள்
பூவை கரும் குற மின் கலம் தங்கு பனிரு தோளா
தீது அகம் ஒன்றினர் வஞ்சகம் துஞ்சியிடாதவர் சங்கரர் தந்த தென்பும் பல
சேர் நிருதன் குலம் அஞ்ச முன் சென்றிடு திறலோனே
சீதளம் முந்து மணம் தயங்கும் பொழில் சூழ் தர விஞ்சைகள் வந்து இறைஞ்சும் பதி
தேவர் பணிந்து எழு தென்பரங்குன்று உறை பெருமாளே
பாடல்-13
சந்ததம் பந்த தொடராலே சஞ்சலம் துஞ்சி திரியாதே
கந்தன் என்று என்று உற்று உனை நாளும் கண்டு கொண்டு அன்பு உற்றிடுவேனோ
தந்தியின் கொம்பை புணர்வோனே சங்கரன் பங்கில் சிவை பாலா
செந்தில் அம் கண்டி கதிர் வேலா தென்பரங்குன்றில் பெருமாளே
பாடல்-14
சருவும்படி வந்தனன் இங்கித மதன் நின்றிட அம்புலியும் சுடு
தழல் கொண்டிட மங்கையர் கண்களின் வசமாகி
சயிலம் கொளு மன்றல் பொருந்திய பொழிலின் பயில் தென்றலும் ஒன்றிய
தட அம் சுனை துன்றி எழுந்திட திறமாவே
இரவும் பகல் அந்தியும் நின்றிடு குயில் வந்து இசை தெந்தன என்றிட
இரு கண்கள் துயின்றிடல் இன்றியும் அயர்வாகி
இவண் நெஞ்சு பதன்பதன் என்றிட மயல் கொண்டு வருந்திய வஞ்சகன்
இனி உன்தன் மலர்ந்து இலகும் பதம் அடைவேனோ
திரு ஒன்றி விளங்கிய அண்டர்கள் மனையின் தயிர் உண்டவன் எண் திசை
திகழும் புகழ் கொண்டவன் வண் தமிழ் பயில்வோர் பின்
திரிகின்றவன் மஞ்சு நிறம் புனைபவன் மிஞ்சு திறம் கொள வென்று அடல்
செய துங்க முகுந்தன் மகிழ்ந்து அருள் மருகோனே
மருவும் கடல் துந்துமியும் குட முழவங்கள் குமின்குமின் என்றிட
வளம் ஒன்றிய செந்திலில் வந்து அருள் முருகோனே
மதியும் கதிரும் புயலும் தினம் மறுகும்படி அண்டம் இலங்கிட
வளர்கின்ற பரங்கிரி வந்து அருள் பெருமாளே
பாடல்-15
தட கை பங்கயம் கொடைக்கு கொண்டல் தண் தமிழ்க்கு தஞ்சம் என்று உலகோரை
தவித்து சென்று இரந்து உளத்தில் புண்படும் தளர்ச்சி பம்பரம்தனை ஊசல்
கடத்தை துன்ப மண் சடத்தை துஞ்சிடும் கலத்தை பஞ்ச இந்த்ரிய வாழ்வை
கணத்தில் சென்று இடம் திருத்தி தண்டை அம் கழற்கு தொண்டு கொண்டு அருள்வாயே
படைக்க பங்கயன் துடைக்க சங்கரன் புரக்க கஞ்சை மன் பணியாக
பணித்து தம் பயம் தணித்து சந்ததம் பரத்தை கொண்டிடும் தனி வேலா
குடக்கு தென்பரம்பொருப்பில் தங்கும் அம் குலத்தில் கங்கை தன் சிறியோனே
குற பொன் கொம்பை முன் புனத்தில் செம் கரம் குவித்து கும்பிடும் பெருமாளே
பாடல்-16
பதித்த செம் சந்த பொன் குட நித்தம் பருத்து உயர்ந்து அண்டத்தில் தலை முட்டும்
பருப்பதம் தந்த செப்பு அவை ஒக்கும் தன பாரம்
பட புயங்கம் பல் கக்கு கடு பண் செருக்கு வண்டு அம்பு அப்பில் கயல் ஒக்கும்
பருத்த கண் கொண்டைக்கு ஒக்கும் இருட்டு என்று இளைஞோர்கள்
துதித்து முன் கும்பிட்டு உற்றது உரைத்து அன்பு உவக்க நெஞ்சு அஞ்ச சிற்றிடைசுற்றும்
துகில் களைந்து இன்பம் துர்க்கம் அளிக்கும் கொடியார் பால்
துவக்குணும் பங்க பித்தன் அவத்தன் புவிக்குள் என் சிந்தை புத்தி மயக்கம்
துறக்க நின் தண்டை பத்மம் எனக்கு என்று அருள்வாயே
குதித்து வெண் சங்கத்தை சுறவு எற்றும் கடல் கரந்து அஞ்சி புக்க அரக்கன்
குடல் சரிந்து எஞ்ச குத்தி விதிர்க்கும் கதிர் வேலா
குல கரும்பின் சொல் தத்தை இப பெண்தனக்கு வஞ்சம் சொல் பொச்சை இடை
குங்குகுக்குகும் குங்கு குக்குகு குக்கும் குகுகூகூ
திதித்திதி திந்தி தித்தி என கொம்பு அதிர்த்து வெண் சண்ட கட்கம் விதிர்த்தும்
திரள் குவித்து அங்கண் பொட்டு எழ வெட்டும் கொலை வேடர்
தினை புனம் சென்று இச்சித்த பெணை கண்டு உரு கரந்து அங்கு கிட்டி அணைந்து ஒண்
திருப்பரங்குன்றில் புக்கு உள் இருக்கும் பெருமாளே
பாடல்-17
பொருப்பு உறும் கொங்கையர் பொருள் கவர்ந்து ஒன்றிய பிணக்கிடும் சண்டிகள் வஞ்ச மாதர்
புயல் குழன்ற அம் கமழ் அறல் குலம் தங்கு அவிர் முருக்கு வண் செம் துவர் தந்து போகம்
அருத்திடும் சிங்கியர் தருக்கிடும் செம் கயல் அற சிவந்த அம் கையில் அன்பு மேவும்
அவர்க்கு உழன்று அங்கமும் அற தளர்ந்து என் பயன் அருள் பதம் பங்கயம் அன்புறாதோ
அணும் பங்கயன் அலர் கணன் சங்கரர் விதித்து என்றும் கும்பிடு கந்த வேளே
மிகுத்திடும் வன் சமணரை பெரும் திண் கழு மிசைக்கு இடும் செந்தமிழ் அங்க வாயா
பெருக்கு தண் சண்பக வனம் திடம் கொங்கொடு திறல் செழும் சந்து அகில் துன்றி நீடும்
தினை புனம் பைம் கொடி தனத்துடன் சென்று அணை திருப்பரங்குன்று உறை தம்பிரானே
பாடல்-18
மன்றல் அம் கொந்து மிசை தெந்தன தெந்தனென வண்டு இனம் கண்டு தொடர் குழல் மாதர்
மண்டிடும் தொண்டை அமுது உண்டு கொண்டு அன்பு மிக வம்பிடும் கும்ப கன தன மார்பில்
ஒன்று அம்பு ஒன்று விழி கன்ற அங்கம் குழைய உந்தி என்கின்ற மடு விழுவேனை
உன் சிலம்பும் கனக தண்டையும் கிண்கிணியும் ஒண் கடம்பும் புனையும் அடி சேராய்
பன்றி அம் கொம்பு கமடம் புயங்கம் சுரர்கள் பண்டை என்பு அங்கம் அணிபவர் சேயே
பஞ்சரம் கொஞ்சு கிளி வந்துவந்து ஐந்து கர பண்டிதன் தம்பி எனும் வயலூரா
சென்று முன் குன்றவர்கள் தந்த பெண் கொண்டு வளர் செண்பகம் பைம்பொன் மலர் செறி சோலை
திங்களும் செம் கதிரும் மங்குலும் தங்கும் உயர் தென்பரங்குன்றில் உறை பெருமாளே
பாடல்-19
வடத்தை மிஞ்சிய புளகித வன முலைதனை திறந்து எதிர் வரும் இளைஞர்கள் உயிர்
மயக்கி ஐங்கணை மதனனை ஒரு அருமையினாலே
வருத்தி வஞ்சக நினைவொடு மெலமெல நகைத்து நண்பொடு வரும் இரும் என உரை
வழுத்தி அங்கு அவரோடு சருவியும் உடல் தொடுபோதே
விடத்தை வென்றிடு படை விழி கொடும் உளம் மருட்டி வண் பொருள் கவர் பொழுதினில் மயல்
விருப்பு எனும்படி மடி மிசையினில் விழு தொழில் தானே
விளைத்திடும் பல கணிகையர் தமது பொய் மனத்தை நம்பிய சிறியனை வெறியனை
விரை பதம்தனில் அருள்பெற நினைகுவது உளதோ தான்
குடத்தை வென்றிடு கிரி என எழில் தளதளத்த கொங்கைகள் மணி வடம் அணி சிறு
குற கரும்பின் மெய் துவள் புயன் என வரு வடி வேலா
குரை கரும் கடல் திரு அணை என முனம் அடைத்து இலங்கையின் அதிபதி நிசிசரர்
குலத்தொடும் பட ஒரு கணை விடும் அரி மருகோனே
திடத்து எதிர்ந்திடும் அசுரர்கள் பொடிபட அயில் கொடும் படை விடு சரவணபவ
திற குகன் குருபரன் என் வரும் ஒரு முருகோனே
செழித்த தண்டலைதொறும் இலகிய குட வளை குலம் தரு தரளமும் மிகும் உயர்
திருப்பரங்கிரி வள நகர் மருவிய பெருமாளே
பாடல்-20
வரை தடம் கொங்கையாலும் வளை படும் செம் கையாலும் மதர்த்திடும் கெண்டையாலும் அனைவோரும்
வடுப்படும் தொண்டையாலும் விரைத்திடும் கொண்டையாலும் மருட்டிடும் சிந்தை மாதர் வசமாகி
எரி படும் பஞ்சு போல மிக கெடும் தொண்டனேனும் இனல்படும் தொந்த வாரி கரி ஏற
இசைத்திடும் சந்த பேடம் ஒலித்திடும் தண்டை சூழும் இணை பதம் புண்டரீகம் அருள்வாயே
சுரர்க்கு வஞ்சம் செய் சூரன் இள க்ரவுஞ்சன் தன்னோடு துளக்க எழுந்து அண்ட கோளம் அளவாக
துரத்தி அன்று இந்த்ரலோகம் அழித்தவன் பொன்று மாறு சுடப்ப அரும் சண்ட வேலை விடுவோனே
செருக்கு எழுந்து உம்பர் சேனை துளக்க வென்று அண்டம் ஊடு தெழித்திடும் சங்கபாணி மருகோனே
தினை புனம் சென்று உலாவு குறத்தியின் இன்பம் பராவு திருப்பரங்குன்றம் மேவு பெருமாளே
திருப்புகழ் பாடல் வரிகள்
பாடல்-21
அம் கை மென் குழல் ஆய்வார் போலே சந்தி நின்று அயலோடே போவார்
அன்பு கொண்டிட நீரோ போறீர் அறியீரோ
அன்று வந்து ஒரு நாள் நீர் போனீர் பின்பு கண்டு அறியோம் நாம் ஈதே
அன்றும் இன்றும் ஓர் போதோ போகா துயில் வாரா
எங்கள் அந்தரம் வேறு ஆர் ஓர்வார் பண்டு தந்தது போதாதோ மேல்
இன்று தந்து உறவோ தான் ஈது ஏன் இது போதாது
இங்கு நின்றது என் வீடே வாரீர் என்று இணங்கிகள் மாயா லீலா
இன்ப சிங்கியில் வீணே வீழாது அருள்வாயே
மங்குல் இன்புறு வானாய் வானூடு அன்று அரும்பிய காலாய் நீள் கால்
மண்டுறும் புகை நீறா வீறா எரி தீயாய்
வந்து இரைந்து எழு நீராய் நீர் சூழ் அம்பரம் புனை பாராய் பார் ஏழ்
மண்டலம் புகழ் நீயாய் நானாய் மலரோனாய்
உங்கள் சங்கரர்தாமாய் நாம் ஆர் அண்ட பந்திகள்தாமாய் வானாய்
ஒன்றினும் கடை தோயா மாயோன் மருகோனே
ஒண் தடம் பொழில் நீடு ஊர் கோடு ஊர் செந்தில் அம் பதி வாழ்வே வாழ்வோர்
– உண்ட நெஞ்சு அறி தேனே வானோர் பெருமாளே
பாடல்-22
அந்தகன் வரும் தினம் பிறகிட சந்ததமும் வந்து கண்டு அரிவையர்க்கு
அன்பு உருகும் சங்கதம் தவிர முக்குணம் மாள
அந்தி பகல் என்ற இரண்டையும் ஒழித்து இந்திரிய சஞ்சலம் களையறுத்து
அம்புய பதங்களின் பெருமையை கவி பாடி
செந்திலை உணர்ந்துணர்ந்து உணர்வுற கந்தனை அறிந்தறிந்து அறிவினில்
சென்று செருகும் தடம் தெளிதர தணியாத
சிந்தையும் அவிழ்ந்தவிழ்ந்து உரை ஒழித்து என் செயல் அழிந்தழிந்து அழிய மெய்
சிந்தை வர என்று நின் தெரிசனை படுவேனோ
கொந்து அவிழ் சரண்சரண்சரண் என கும்பிடு புரந்தரன் பதி பெற
குஞ்சரி குயம் புயம் பெற அரக்கர் உரு மாள
குன்று இடிய அம் பொனின் திரு வரை கிண்கிணி கிணின்கிணின் கிணின் என
குண்டலம் அசைந்து இளம் குழைகள் ப்ரபை வீச
தந்தன தனந்தனம் தனஎன செம் சிறு சதங்கை கொஞ்சிட மணி
தண்டைகள் கலின்கலின் கலின் என திருவான
சங்கரி மனம் குழைந்து உருக முத்தம் தர வரும் செழும் தளர் நடை
சந்ததி சகம் தொழும் சரவண பெருமாளே
பாடல்-23
அமுத உததி விடம் உமிழும் செம் கண் திங்கள் பகவின் ஒளிர் வெளிறு எயிறு துஞ்சல் குஞ்சி
தலையும் உடையவன் அரவ தண்ட சண்ட சமன் ஓலை
அது வருகும் அளவில் உயிர் அங்கிட்டு இங்கு பறை திமிலை திமிர்தம் மிகு தம்பட்டம் பல்
கரைய உறவினர் அலற உந்தி சந்தி தெருவூடே
எமது பொருள் எனும் மருளை இன்றி குன்றி பிள அளவு தினை அளவு பங்கிட்டு உண்கைக்கு
இளைய முது வசை தவிர இன்றைக்கு அன்றைக்கு என நாடாது
இடுக கடிது எனும் உணர்வு பொன்றி கொண்டிட்டு டுடுடுடு டுடுடுடுடு டுண்டுட் டுண்டுட்டு
என அகலும் நெறி கருதி வெஞ்சத்து அஞ்சி பகிராதோ
குமுத பதி வகிர் அமுது சிந்தச்சிந்த சரண பரிபுர சுருதி கொஞ்சக்கொஞ்ச
குடில சடை பவுரி கொடு தொங்க பங்கில் கொடியாட
குல தடினி அசைய இசை பொங்கப்பொங்க கழல் அதிர டெகுடெகுட டெங்கட் டெங்க
தொகுகுகுகு தொகுகுகுகு தொங்கத்தொங்க தொகுதீதோ
திமிதம் என முழவு ஒலி முழங்க செம் கை தமருகம் அது சதியொடு அன்பர்க்கு இன்ப
திறம் உதவும் பரத குரு வந்திக்கும் சற்குருநாதா
திரளும் மணி தரளம் உயர் தெங்கில் தங்கி புரள எறி திரை மகர சங்க துங்க
திமிர சல நிதி தழுவு செந்தில் கந்த பெருமாளே
பாடல்-24
அம்பு ஒத்த விழி தந்த கலகத்து அஞ்சி கமல கணையாலே
அன்றிற்கும் அனல் தென்றற்கும் இளைத்து அந்தி பொழுதில் பிறையாலே
எம் பொன் கொடி மன் துன்ப கனல் அற்று இன்ப கலவி துயர் ஆனாள்
என் பெற்று உலகில் பெண் பெற்றவருக்கு இன்ப புலி உற்றிடலாமோ
கொம்பு கரி பட்டு அஞ்ச பதும கொங்கை குறவிக்கு இனியோனே
கொன்றை சடையற்கு ஒன்றை தெரிய கொஞ்சி தமிழை பகர்வோனே
செம்பொன் சிகர பைம்பொன் கிரியை சிந்த கறுவி பொரும் வேலா
செம் சொல் புலவர்க்கு அன்புற்ற திரு செந்தில் குமர பெருமாளே
பாடல்-25
அருண மணி மேவு பூஷித ம்ருகமத படீர லேபன
அபி நவ விசால பூரண அம் பொன் கும்ப தனம் மோதி
அளி குலவு மாதர் லீலையில் முழுகி அபிஷேகம் ஈது என
அறவும் உறவு ஆடி நீடிய அங்கை கொங்கைக்கு இதமாகி
இருள் நிறை அம் ஓதி மாலிகை சருவி உறவான வேளையில்
இழை கலைய மாதரார் வழி இன்புற்று அன்புற்று அழியா நீள்
இரவு பகல் மோகனாகியே படியில் மடியாமல் யானும் உன்
இணை அடிகள் பாடி வாழா என் நெஞ்சில் செம் சொல் தருவாயே
தருண மணி ஆடு அரா அணி குடில சடில ஆதி ஓதிய
சதுர் மறையின் ஆதி ஆகிய சங்க துங்க குழையாளர்
தரு முருக மேக சாயலார் தமர மகர ஆழி சூழ் புவிதனை
முழுதும் வாரியே அமுது உண்டிட்டு அண்டர்க்கு அருள்கூரும்
செரு முதலி மேவும் மா வலி அதி மத போல மா மலை
தெளிவினுடன் மூலமே என முந்த சிந்தித்து அருள் மாயன்
திரு மருக சூரன் மார்பொடு சிலை உருவ வேலை ஏவிய
ஜெய சரவணா மனோகர செந்தில் கந்த பெருமாளே
பாடல்-26
அவனி பெறும் தோட்டு அம் பொன் குழை அடர் அம்பால் புண்பட்டு
அரிவையர்தம்பால் கொங்கைக்கு இடையே சென்று
அணைதரு பண்டு ஆட்டம் கற்று உருகிய கொண்டாட்டம் பெற்று
அழி தரு திண்டாட்டம் சற்று ஒழியாதே
பவம் அற நெஞ்சால் சிந்தித்து இலகு கடம்பு ஆர் தண்டை
பத உகளம் போற்றும் கொற்றமும் நாளும்
பதறிய அங்காப்பும் பத்தியும் அறிவும் போய் சங்கை
படு துயர் கண் பார்த்து அன்புற்று அருளாயோ
தவ நெறி குன்றா பண்பில் துறவினரும் தோற்று அஞ்ச
தனி மலர் அஞ்சு ஆர் புங்கத்து அமர் ஆடி
தமிழ் இனி தென் கால் கன்றில் திரிதரு கஞ்சா கன்றை
தழல் எழ வென்றார்க்கு அன்று அற்புதமாக
சிவ வடிவும் காட்டும் சற்குருபர தென்பால் சங்க
திரள் மணி சிந்தா சிந்து கரை மோதும்
தினகர திண் தேர் சண்ட பரி இடறும் கோட்டு இஞ்சி
திரு வளர் செந்தூர் கந்த பெருமாளே
பாடல்-27
அளக பாரம் அலைந்து குலைந்திட வதனம் வேர்வு துலங்கி நலங்கிட
அவச மோகம் விளைந்து தளைந்திட அணை மீதே
அருண வாய் நகை சிந்திய சம்ப்ரம அடர் நகா நுதி பங்க விதம் செய்து
அதர பானம் அருந்தி மருங்கு இற முலை மேல் வீழ்ந்து
உளமும் வேறுபடும்படி ஒன்றிடு மகளிர் தோதக இன்பின் முயங்குதல்
ஒழியுமாறு தெளிந்து உளம் அன்பொடு சிவயோகத்து
உருகு ஞான பரம்பர தந்திர அறிவினோர் கருது அம் கொள் சிலம்பு அணி
உபய சீதள பங்கய மென் கழல் தருவாயே
இளகிடா வளர் சந்தன குங்கும களப பூரண கொங்கை நலம் புனை
இரதி வேள் பணி தந்தையும் அந்தண மறையோனும்
இனிது உறாது எதிர் இந்திரன் அண்டரும் ஹரஹரா சிவசங்கர சங்கர
என மிகா வரு நஞ்சினை உண்டவர் அருள் பாலா
வளர் நிசாசுரர் தங்கள் சிரம் பொடிபட விரோதம் இடும் குல சம்ப்ரமன்
மகர வாரி கடைந்த நெடும் புயல் மருகோனே
வளரும் வாழையும் மஞ்சளும் இஞ்சியும் இடை விடாது நெருங்கிய மங்கல
மகிமை மா நகர் செந்திலில் வந்து உறை பெருமாளே
பாடல்-28
அறிவு அழிய மயல் பெருக உரையும் அற விழி சுழல அனல் அவிய மலம் ஒழுக அகலாதே
அனையும் மனை அருகில் உற வெருவி அழ உறவும் அழ அழலின் நிகர் மறலி எனை அழையாதே
செறியும் இருவினை கரணம் மருவு புலன் ஒழிய உயர் திருவடியில் அணுக வரம் அருள்வாயே
சிவனை நிகர் பொதிய வரை முநிவன் அகம் மகிழ இரு செவி குளிர இனிய தமிழ் பகர்வோனே
நெறி தவறி அலரி மதி நடுவன் மக பதி முளரி நிருதி நிதி பதி கரிய வன மாலி
நிலவு மறையவன் இவர்கள் அலைய அரசுரிமை புரி நிருதன் உரம் அற அயிலை விடுவோனே
மறி பரசு கரம் இலகு பரமன் உமை இரு விழியும் மகிழ மடி மிசை வளரும் இளையோனே
மதலை தவழ் உததி இடை வரு தரள மணி புளினம் மறைய உயர் கரையில் உறை பெருமாளே
பாடல்-29
அனிச்சம் கார் முகம் வீசிட மாசறு துவள் பஞ்சான தடாகம் விடா மட
அனத்தின் தூவி குலாவிய சீறடி மட மானார்
அருக்கன் போல ஒளி வீசிய மா மரகத பைம் பூண் அணி வார் முலை மேல் முகம்
அழுத்தும் பாவியை ஆவி இடேறிட நெறி பாரா
வினை சண்டாளனை வீணனை நீள் நிதிதனை கண்டு ஆணவமான நிர்மூடனை
விடக்கு அன்பாய் நுகர் பாழனை ஓர் மொழி பகராதே
விகற்பம் கூறிடு மோக விகாரனை அறத்தின்பால் ஒழுகாத மூதேவியை
விளித்து உன் பாதுகை நீ தர நான் அருள்பெறுவேனோ
முனை சங்கு ஓலிடு நீல மகா உததி அடைத்து அஞ்சாத இராவணன் நீள் பல
முடிக்கு அன்று ஓர் கணை ஏவும் இராகவன் மருகோனே
முளைக்கும் சீத நிலாவொடு அரா விரி திரை கங்கா நதி தாதகி கூவிள
முடிக்கும் சேகரர் பேர் அருளால் வரு முருகோனே
தினை செம் கானக வேடுவர் ஆனவர் திகைத்து அந்தோ எனவே கணி ஆகிய
திறல் கந்தா வளி நாயகி காமுறும் எழில் வேலா
சிறக்கும் தாமரை ஓடையில் மேடையில் நிறக்கும் சூல் வளை பால் மணி வீசிய
திருச்செந்தூர் வரு சேவகனே சுரர் பெருமாளே
பாடல்-30
அனைவரும் மருண்டு அருண்டு கடிது என வெகுண்டு இயம்ப அமர அடி பின்தொடர்ந்து பிண நாறும்
அழுகு பிணி கொண்டு விண்டு புழு உடல் எலும்பு அலம்பும் அவல உடலம் சுமந்து தடுமாறி
மனைதொறும் இதம் பகர்ந்து வரவர விருந்து அருந்தி மன வழி திரிந்து மங்கும் வசை தீர
மறை சதுர் விதம் தெரிந்து வகை சிறு சதங்கை கொஞ்சு மலர் அடி வணங்க என்று பெறுவேனோ
தினை மிசை சுகம் கடிந்த புன மயில் இளம் குரும்பை திகழ் இரு தனம் புணர்ந்த திரு மார்பா
ஜெக முழுதும் முன்பு தும்பி முகவனொடு தந்தை முன்பு திகிரி வலம் வந்த செம்பொன் மயில் வீரா
இனிய கனி மந்தி சிந்து மலை கிழவ செந்தில் வந்த இறைவ குக கந்த என்றும் இளையோனே
எழு கடலும் எண் சிலம்பும் நிசிசரரும் அஞ்ச அஞ்சும் இமயவரை அஞ்சல் என்ற பெருமாளே
திருப்புகழ் பாடல்கள் with lyrics
பாடல்-31
இயல் இசையில் உசித வஞ்சிக்கு அயர்வாகி
இரவுபகல் மனது சிந்தித்து உழலாதே
உயர் கருணைபுரியும் இன்ப கடல் மூழ்கி
உனை எனது உளம் அறியும் அன்பை தருவாயே
மயில் தகர் கல் இடையர் அந்த தினை காவல்
வனச குறமகளை வந்தித்து அணைவோனே
கயிலை மலை அனைய செந்தில் பதி வாழ்வே
கரி முகவன் இளைய கந்த பெருமாளே
பாடல்-32
இரு குழை எறிந்த கெண்டைகள் ஒரு குமிழ் அடர்ந்து வந்திட இணை சிலை நெரிந்து எழுந்திட அணை மீதே இருள் அளக பந்தி வஞ்சியில் இரு கலை உடன் குலைந்திட இதழ் அமுது அருந்து சிங்கியின் மனம் மாய முருகொடு கலந்த சந்தன அளறுபடு குங்குமம் கமழ் முலை முகடு கொண்டு எழும்தொறும் முருகு ஆர முழு மதி புரந்த சிந்துர அரிவையருடன் கலந்திடு முகடியும் நலம் பிறந்திட அருள்வாயே எரி விடம் நிமிர்ந்த குஞ்சியினில் நிலவொடும் எழுந்த கங்கையும் இதழியொடு அணிந்த சங்கரர் களி கூறும் இம வரை தரும் கரும் குயில் மரகத நிறம் தரும் கிளி எனது உயிர் எனும் த்ரியம்பகி பெருவாழ்வே அரை வடம் அலம்பு கிண்கிணி பரிபுரம் நெருங்கு தண்டைகள் அணி மணி சதங்கை கொஞ்சிட மயில் மேலே அகம் மகிழ்வு கொண்டு சந்ததம் வரு குமர முன்றிலின் புறம் அலை பொருத செந்தில் தங்கிய பெருமாளே
பாடல்-33
இருள் விரி குழலை விரித்து தூற்றவும் இறுகிய துகிலை நெகிழ்த்து காட்டவும்
இரு கடை விழியும் முறுக்கி பார்க்கவும் மைந்தரோடே
இலை பிளவு அதனை நடித்து கேட்கவும் மறுமொழி பலவும் இசைத்து சாற்றவும்
இடையிடை சிறிது நகைத்து காட்டவும் எங்கள் வீடே
வருக என ஒரு சொல் உரைத்து பூட்டவும் விரி மலர் அமளி அணைத்து சேர்க்கவும்
வரு பொருள் அளவில் உருக்கி தேற்றவும் நிந்தையாலே
வனை மனை புகுதில் அடித்து போக்கவும் ஒரு தலை மருவு புணர்ச்சி தூர்த்தர்கள்
வசை விட நினது பதத்தை போற்றுவது எந்த நாளோ
குரு மணி வயிரம் இழித்து கோட்டிய கழை மட உருவு வெளுத்து தோற்றிய
குளிறு இசை அருவி கொழித்து தூற்றிய மண்டு நீர் ஊர்
குழி படு கலுழி வயிற்றை தூர்த்து எழு திடர் மணல் இறுகு துருத்தி கா பொதி
குளிர் நிழல் அருவி கலக்கி பூ புனை வண்டல் ஆடா
முருகு அவிழ் துணர்கள் உகுத்து காய் தினை விளை நடு இதணில் இருப்பை காட்டிய
முகிழ் முலை இளைய குறத்திக்கு ஆட்படு செந்தில் வாழ்வே
முளை இள மதியை எடுத்து சாத்திய சடை முடி இறைவர் தமக்கு சாத்திர
முறை அருள் முருக தவத்தை காப்பவர் தம்பிரானே
பாடல்-34
உததி அறல் மொண்டு சூல் கொள் கரு முகில் என இருண்ட நீல மிக
ஒளி திகழ மன்றல் ஓதி நரை பஞ்சு போலாய்
உதிரம் எழு துங்க வேல விழி மிடை கடை ஒதுங்கு பீளைகளும்
முடை தயிர் பிதிர்ந்ததோ இது என வெம் புலாலாய்
மத கரட தந்தி வாயின் இடை சொருகு பிறை தந்த சூதுகளின்
வடிவு தரு கும்ப மோதி வளர் கொங்கை தோலாய்
வனம் அழியும் மங்கை மாதர்களின் நிலைதனை உணர்ந்து தாளில் உறு
வழி அடிமை அன்புகூரும் அது சிந்தியேனோ
இதழ் பொதி அவிழ்ந்த தாமரையின் மண அறை புகுந்த நான்முகனும்
எறி திரை அலம்பும் பால் உததி நஞ்சு அரா மேல்
இரு விழி துயின்ற நாரணனும் உமை மருவு சந்த்ரசேகரனும்
இமையவர் வணங்கு வாசவனும் நின்று தாழும்
முதல்வ சுக மைந்த பீடிகையில் அகில சக அண்டநாயகிதன்
முகிழ் முலை சுரந்த பால் அமுதம் உண்ட வேளே
முளை முருகு சங்கு வீசி அலை முடுகி மை தவழ்ந்த வாய் பெருகி
முதல் இவரு செந்தில் வாழ்வு தரு தம்பிரானே
பாடல்-35
உருக்கம் பேசிய நீலியர் காசுகள் பறிக்கும் தோஷிகள் மோக விகாரிகள்
உருட்டும் பார்வையர் மா பழிகாரிகள் மதியாதே
உரைக்கும் வீரிகள் கோள் அரவாம் என உடற்றும் தாதியர் காசளவே மனம்
உறைக்கும் தூரிகள் மீதினில் ஆசைகள் புரிவேனோ
அருக்கன் போல் ஒளி வீசிய மா முடி அணைத்தும் தான் அழகாய் நலமே தர
அருள் கண் பார்வையினால் அடியார்தமை மகிழ்வோடே
அழைத்தும் சேதிகள் பேசிய காரண வடிப்பம் தான் எனவே எனை நாள்தொறும்
அதிக்கம் சேர் தரவே அருளால் உடன் இனிது ஆள்வாய்
இருக்கும் காரணம் மீறிய வேதமும் இசைக்கும் சாரமுமே தொழு தேவர்கள்
இடுக்கண் தீர் கனனே அடியார் தவமுடன் மேவி
இலக்கம் தான் எனவே தொழவே மகிழ் விருப்பம் கூர் தரும் ஆதியுமாய் உலகு
இறுக்கும் தாதகி சூடிய வேணியன் அருள் பாலா
திருக்கும் தாபதர் வேதியர் ஆதியர் துதிக்கும் தாள் உடை நாயகன் ஆகிய
செக செம் சோதியும் ஆகிய மாதவன் மருகோனே
செழிக்கும் சாலியும் மேகம் அளாவிய கருப்பம் சோலையும் வாழையுமே திகழ்
திருச்செந்தூர்தனில் மேவிய தேவர்கள் பெருமாளே
பாடல்-36
ஏவினை நேர் விழி மாதரை மேவிய ஏதனை மூடனை நெறி பேணா
ஈனனை வீணனை ஏடு எழுதா முழு ஏழையை மோழையை அகலா நீள்
மா வினை மூடிய நோய் பிணியாளனை வாய்மை இலாதனை இகழாதே
மா மணி நூபுர சீதள தாள் தனி வாழ்வுற ஈவதும் ஒரு நாளே
நாவலர் பாடிய நூல் இசையால் வரு நாரதனார் புகல் குற மாதை
நாடியே கானிடை கூடிய சேவக நாயக மா மயில் உடையோனே
தேவி மநோமணி ஆயி பராபரை தேன் மொழியாள் தரு சிறியோனே
சேண் உயர் சோலையின் நீழலிலே திகழ் சீரலை வாய் வரு பெருமாளே
பாடல்-37
ஓராது ஒன்றை பாராது அந்தத்தோடே வந்திட்டு உயிர் சோர
ஊடா நன்று அற்றார் போல் நின்று எட்டா மால் தந்திட்டு உழல் மாதர்
கூரா அன்பில் சோரா நின்று அக்கு ஓயா நின்று உள் குலையாதே
கோடு ஆர் செம்பொன் தோளா நின் சொல் கோடாது என் கைக்கு அருள்தாராய்
தோரா வென்றி போரா மன்றல் தோளா குன்றை தொளை ஆடீ
சூதாய் எண் திக்கு ஏயா வஞ்ச சூர் மா அஞ்ச பொரும் வேலா
சீர் ஆர் கொன்றை தார் மார்பு ஒன்ற சே ஏறு எந்தைக்கு இனியோனே
தேனே அன்பர்க்கே ஆம் இன் சொல் சேயே செந்தில் பெருமாளே
பாடல்-38
கட்டழகு விட்டு தளர்ந்து அங்கிருந்து முனம் இட்ட பொறி தப்பி பிணம் கொண்டதின் சிலர்கள்
கட்டணம் எடுத்து சுமந்தும் பெரும் பறைகள் முறையோடே
வெட்டவிட வெட்ட கிடஞ்சம் கிடஞ்சம் என மக்கள் ஒருமிக்க தொடர்ந்தும் புரண்டும் வழி
விட்டு வரும் இத்தை தவிர்ந்து உன் பதங்கள் உற உணர்வேனோ
பட்டு உருவி நெட்டை க்ரவுஞ்சம் பிளந்து கடல் முற்றும் அலை வற்றி குழம்பும் குழம்ப முனை
பட்ட அயில் தொட்டு திடம் கொண்டு எதிர்ந்த அவுணர் முடி சாய
தட்டு அழிய வெட்டி கவந்தம் பெரும் கழுகு நிர்த்தம் இட ரத்த குளம் கண்டு உமிழ்ந்து மணி
சற்சமய வித்தை பலன் கண்டு செந்தில் உறை பெருமாளே
பாடல்-39
கண்டு மொழி கொம்பு கொங்கை வஞ்சி இடை அம்பு நஞ்சு கண்கள் குழல் கொண்டல் என்று பலகாலும்
கண்டு உளம் வருந்தி நொந்து மங்கையர் வசம் புரிந்து கங்குல் பகல் என்று நின்று விதியாலே
பண்டை வினை கொண்டு உழன்று வெந்து விழுகின்றல் கண்டு பங்கய பதங்கள் தந்து புகழ் ஓதும்
பண்புடைய சிந்தை அன்பர்தங்களில் உடன் கலந்து பண்பு பெற அஞ்சல்அஞ்சல் என வாராய்
வண்டு படுகின்ற தொங்கல் கொண்டு உற நெருங்கி இண்டு வம்பினை அடைந்து சந்தின் மிக மூழ்கி
வஞ்சியை முனிந்த கொங்கை மென் குற மடந்தை செம் கை வந்து அழகுடன் கலந்த மணி மார்பா
திண் திறல் புனைந்த அண்டர் தங்கள் அபயங்கள் கண்டு செம் சமர் புனைந்து துங்க மயில் மீதே
சென்று அசுரர் அஞ்ச வென்று குன்றிடை மணம் புணர்ந்து செந்தில் நகர் வந்து அமர்ந்த பெருமாளே
பாடல்-40
கமல மாதுடன் இந்திரையும் சரி சொலவொணாத மடந்தையர் சந்தன
களப சீதள கொங்கையில் அங்கையில் இரு போது ஏய்
களவு நூல் தெரி வஞ்சனை அஞ்சன விழியின் மோகித கந்த சுகம் தரு
கரிய ஓதியில் இந்து முகம்தனில் மருளாதே
அமலம் ஆகிய சிந்தை அடைந்து அகல் தொலைவு இலாத அறம் பொருள் இன்பமும்
அடைய ஓதி உணர்ந்து தணந்த பின் அருள் தானே
அறியும் ஆறு பெறும்படி அன்பினின் இனிய நாத சிலம்பு புலம்பிடும்
அருண ஆடக கிண்கிணி தங்கிய அடி தாராய்
குமரி காளி பயங்கரி சங்கரி கவுரி நீலி பரம்பரை அம்பிகை
குடிலை யோகினி சண்டினி குண்டலி எமது ஆயி
குறைவிலாள் உமை மந்தரி அந்தரி வெகு வித ஆகம சுந்தரி தந்து அருள்
குமர மூஷிகம் உந்திய ஐங்கர கண ராயன்
மம விநாயகன் நஞ்சு உமிழ் கஞ்சுகி அணி கஜானன விம்பன் ஒர் அம்புலி
மவுலியான் உறு சிந்தை உகந்து அருள் இளையோனே
வளரும் வாழையும் மஞ்சளும் இஞ்சியும் இடை விடாது நெருங்கிய மங்கல
மகிமை மா நகர் செந்திலில் வந்து உறை பெருமாளே
திருப்புகழ் பாடல்கள் pdf
பாடல்-41
கரி கொம்பம் தனி தங்கம் குடத்து இன்பம் தனத்தின்கண்
கறுப்பும் தன் சிவப்பும் செம் பொறி தோள் சேர்
கணைக்கும் பண்டு உழைக்கும் பங்கு அளிக்கும் பண்பு ஒழிக்கும்
கண் கழுத்தும் சங்கு ஒளிக்கும் பொன் குழை ஆட
சர குஞ்சம் புடைக்கும் பொன் துகில் தந்தம் தரிக்கும் தன்
சடத்தும் பண் பிலுக்கும் சம்பள மாதர்
சலித்தும் பின் சிரித்தும் கொண்டு அழைத்தும் சண் பசப்பும் பெண்
தன துன்பம் தவிப்புண்டு இங்கு உழல்வேனோ
சுரர் சங்கம் துதித்து அந்த அஞ்சு எழுத்து இன்பம் களித்து உண் பண்
சுகம் துய்ந்து இன்பு அலர் சிந்த அங்கு அசுராரை
துவைத்தும் பந்து அடித்தும் சங்கு ஒலித்தும் குன்று இடித்தும் பண்
சுகித்தும் கண் களிப்பு கொண்டிடும் வேலா
சிர பண்பும் கர பண்பும் கடப்பம் தொங்கலில் பண்பும்
சிவ பண்பும் தவ பண்பும் தருவோனே
தினை தொந்தம் குற பெண் பண் சசி பெண் கொங்கையில் துஞ்சும்
செழிக்கும் செந்திலில் தங்கும் பெருமாளே
பாடல்-42
கருப்பம் தங்கு இரத்தம் பொங்கு அரைப்புண் கொண்டு உருக்கும் பெண்களை
கண்டு அங்கு அவர் பின் சென்று அவரோடே
கலப்பு உண்டும் சிலுப்பு உண்டும் துவக்கு உண்டும்
பிணக்கு உண்டும் கலப்பு உண்டும் சலிப்பு உண்டும் தடுமாறி
செரு தண்டம் தரித்து அண்டம் புக தண்டு அந்தகற்கு என்றும்
திகைத்து அம் செகத்து அஞ்சும் கொடு மாயும்
தியக்கம் கண்டு உய கொண்டு என் பிறப்பு பங்கம் சிறை பங்கம்
சிதைத்து உன்றன் பதத்து இன்பம் தருவாயே
அருக்கன் சஞ்சரிக்கும் தெண் திரைக்கண் சென்று அரக்கன் பண்பு
அனைத்தும் பொன்றிட கன்றும் கதிர் வேலா
அணி சங்கம் கொழிக்கும் தண்டு அலை பண்பு எண் திசைக்கும் கொந்தளிக்கும்
செந்திலில் தங்கும் குமரேசா
புரக்கும் சங்கரிக்கும் சங்கரர்க்கும் சங்கரர்க்கு இன்பம்
புதுக்கும் கங்கையட்கும் சுதன் ஆனாய்
புன குன்றம் திளைக்கும் செந்தினை பைம்பொன் குற கொம்பின்
புற தண் கொங்கையில் துஞ்சும் பெருமாளே
பாடல்-43
களபம் ஒழுகிய புளகித முலையினர் கடுவும் அமிர்தமும் விரவிய விழியினர்
கழுவு சரி புழுகு ஒழுகிய குழலினர் எவரோடும்
கலகம் இடு கயல் எறி குழை விரகியர் பொருள் இல் இளைஞரை வழி கொடு
மொழி கொடு தளர விடுபவர் தெருவினில் எவரையும் நகை ஆடி
பிளவுபெறில் அதில் அளவுஅளவு ஒழுகியர் நடையில் உடையினில் அழகொடு திரிபவர்
பெருகு பொருள் பெறில் அமளியில் இதமொடு குழைவோடே
பிணமும் அணைபவர் வெறி தரு புனல் உணும் அவச வனிதையர் முடுகொடும் அணைபவர்
பெருமை உடையவர் உறவினை விட அருள்புரிவாயே
அளையில் உறை புலி பெறும் மகவு அயில்தரு பசுவின் நிரை முலை அமுது உண நிரை
மகள் வசவனொடு புலி முலை உண மலையுடன் உருகா நீள்
அடவிதனில் உள உலவைகள் தளிர்விட மருள மதமொடு களிறுகள் பிடியுடன்
அகல வெளி உயிர் பறவைகள் நிலம் வர விரல் சேர் ஏழ்
தொளைகள் விடு கழை விரல் முறை தடவிய இசைகள் பலபல தொனி தரு கரு முகில்
சுருதி உடையவன் நெடியவன் மனம் மகிழ் மருகோனே
துணைவ குண தர சரவணபவ நம முருக குருபர வளர் அறுமுக குக
துறையில் அலை எறி திரு நகர் உறை தரு பெருமாளே
பாடல்-44
கனங்கள் கொண்ட குந்தளங்களும் குலைந்து அலைந்து விஞ்சும் கண்கள் சிவந்து அயர்ந்து களிகூர
கரங்களும் குவிந்து நெஞ்சகங்களும் கசிந்திடும் கறங்கும் பெண்களும் பிறந்து விலை கூறி
பொனின் குடங்கள் அஞ்சு மென் தனங்களும் புயங்களும் பொருந்தி அன்பு நண்பு பண்பும் உடனாக
புணர்ந்து உடன் புலர்ந்து பின்பு கலந்து அகம் குழைந்து அவம் புரிந்து சந்ததம் திரிந்து படுவேனோ
அனங்கன் நொந்து நைந்து வெந்து குந்து சிந்த அன்று கண் திறந்து இருண்ட கண்டர் தந்த அயில் வேலா அடர்ந்துஅடர்ந்து எதிர்ந்து வந்த வஞ்சர் அஞ்ச வெம் சமம்புரிந்த அன்பர் இன்ப நண்ப உரவோனே
சினங்கள் கொண்டு இலங்கை மன் சிரங்கள் சிந்த வெம் சரம் தெரிந்தவன் பரிந்த இன்ப மருகோனே
சிவந்த செம் சதங்கையும் சிலம்பு தண்டையும் புனைந்து செந்தில் வந்த கந்த எங்கள் பெருமாளே
பாடல்-45
கன்றில் உறு மானை வென்ற விழியாலே கஞ்ச முகை மேவும் முலையாலே
கங்குல் செறி கேச மங்குல் குலையாமை கந்த மலர் சூடும் அதனாலே
நன்று பொருள் தீர வென்று விலை பேசி நம்பவிடு மாதருடன் ஆடி
நஞ்சு புசி தேரை அங்கம் அதுவாக நைந்து விடுவேனை அருள் பாராய்
குன்றிமணி போல்வ செம் கண் வரி போகி கொண்ட படம் வீசு மணி கூர் வாய்
கொண்ட மயில் ஏறி அன்று அசுரர் சேனை கொன்ற குமரேச குருநாதா
மன்றல் கமழ் பூகம் தெங்கு திரள் சோலை வண்டு படு வாவி புடை சூழ
மந்தி நடமாடும் செந்தி நகர் மேவு மைந்த அமரேசர் பெருமாளே
பாடல்-46
காலனார் வெம் கொடும் தூதர் பாசம்கொடு என் காலில் ஆர்தந்து உடன் கொடு போக
காதல் ஆர் மைந்தரும் தாயராரும் சுடும் கானமே பின் தொடர்ந்து அலறா முன்
சூலம் வாள் தண்டு செம் சேவல் கோதண்டமும் சூடு தோளும் தடம் திரு மார்பும்
தூய தாள் தண்டையும் காண ஆர்வம் செயும் தோகை மேல் கொண்டு முன் வரவேணும்
ஆலகாலம் பரன் பாலதாக அஞ்சிடும் தேவர் வாழ அன்று உகந்து அமுது ஈயும்
ஆரவாரம் செயும் வேலை மேல் கண் வளர்ந்த ஆதி மாயன் தன் நல் மருகோனே
சாலி சேர் சங்கினம் வாவி சூழ் பங்கயம் சாரல் ஆர் செந்தில் அம் பதி வாழ்வே
தாவு சூர் அஞ்சி முன் சாய வேகம்பெறும் தாரை வேல் உந்திடும் பெருமாளே
பாடல்-47
குகரம் மேவு மெய் துறவினின் மறவா கும்பிட்டு உந்தி தடம் மூழ்கி
குமுத வாயில் முற்று அமுதினை நுகரா கொண்ட கொண்டை குழலாரோடு
அகரு தூளி கர்ப்புர தன இரு கோட்டு அன்புற்று இன்ப கடலூடே
அமிழுவேனை மெத்தென ஒரு கரை சேர்த்து அம் பொன் தண்டை கழல் தாராய்
ககன கோளகைக்கு அண இரும் அளவா கங்கை துங்க புனலாடும்
கமலவதனற்கு அளவிட முடியா கம்பர்க்கு ஒன்றை புகல்வோனே
சிகர கோபுரத்தினும் மதிளினும் மேல் செம்பொன் கம்ப தளம் மீதும்
தெருவிலேயும் நித்தலம் எறி அலை வாய் செந்தில் கந்த பெருமாளே
பாடல்-48
குடர் நிணம் என்பு சலம் மலம் அண்டு குருதி நரம்பு சீ ஊன் பொதி தோல்
குலவு குரம்பை முருடு சுமந்து குனகி மகிழ்ந்து நாயேன் தளரா
அடர் மதன் அம்பை அனைய கரும் கண் அரிவையர் தங்கள் தோள் தோய்ந்து அயரா
அறிவு அழிகின்ற குணம் அற உன்றன் அடி இணை தந்து நீ ஆண்டு அருள்வாய்
தடவு இயல் செந்தில் இறையவ நண்பு தரு குற மங்கை வாழ்வு ஆம் புயனே
சரவண கந்த முருக கடம்ப தனி மயில் கொண்டு பார் சூழ்ந்தவனே
சுடர் படர் குன்று தொளை பட அண்டர் தொழ ஒரு செம் கை வேல் வாங்கியவா
துரித பதங்க இரத ப்ரசண்ட சொரி கடல் நின்ற சூர அந்தகனே
பாடல்-49
குழைக்கும் சந்தன செம் குங்குமத்தின் சந்த நல் குன்றம்
குலுக்கும் பைங்கொடிக்கு என்று இங்கு இயலாலே
குழைக்கும் குண் குமிழ்க்கும் சென்று உரைக்கும் செம் கயல் கண் கொண்டு
அழைக்கும் பண் தழைக்கும் சிங்கியராலே
உழைக்கும் சங்கட துன்பன் சுக பண்டம் சுகித்து உண்டுஉண்டு
உடல் பிண்டம் பருத்து இன்று இங்கு உழலாதே
உதிக்கும் செம் கதிர் சிந்தும் ப்ரபைக்கு ஒன்றும் சிவக்கும் தண்டை
உயர்க்கும் கிண்கிணி செம் பஞ்சு அடி சேராய்
தழைக்கும் கொன்றையை செம்பொன் சடைக்கு அண்ட அங்கியை தங்கும்
தரத்த செம் புயத்து ஒன்றும் பெருமானார்
தனி பங்கின் புறத்தில் செம் பரத்தின் பங்கயத்தில் சஞ்சரிக்கும்
சங்கரிக்கு என்றும் பெருவாழ்வே
கழைக்கும் குஞ்சர கொம்பும் கலை கொம்பும் கதித்து என்றும்
கயல் கண் பண்பு அளிக்கும் புய வேளே
கறுக்கும் கொண்டலில் பொங்கும் கடல் சங்கம் கொழிக்கும் செந்திலில்
கொண்டு அன்பினில் தங்கும் பெருமாளே
பாடல்-50
கொங்கைகள் குலுங்க வளை செம் கையில் விளங்க இருள் கொண்டலை அடைந்த குழல் வண்டு பாட
கொஞ்சிய வன அம் குயில்கள் பஞ்ச நல் வனம் கிளிகள் கொஞ்சியது எனும் குரல்கள் கெந்து பாயும்
வெம் கயல் மிரண்ட விழி அம்புலி அடைந்த நுதல் விஞ்சையர்கள் தங்கள் மயல் கொண்டு மேலாய்
வெம் பிணி உழன்ற பவ சிந்தனை நினைந்து உனது மின் சரண பைங்கழலொடு அண்ட ஆளாய்
சங்க முரசம் திமிலை துந்துமி ததும்பு வளை தந்தன தனந்த என வந்த சூரர்
சங்கை கெட மண்டி திகை எங்கிலும் மடிந்து விழ தண் கடல் கொளுந்த நகை கொண்ட வேலா
சங்கரன் உகந்த பரிவின் குரு எனும் சுருதி தங்களின் மகிழ்ந்து உருகும் எங்கள் கோவே
சந்திர முகம் செயல் கொள் சுந்தர குறம் பெணொடு சம்பு புகழ் செந்தில் மகிழ் தம்பிரானே
திருமண திருப்புகழ் பாடல் வரிகள் -திருமண தடை நீக்கும் திருப்புகழ் பாடல்
விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
மிகவானி லிந்துவெயில்காய
மிதவாடை வந்து தழல்போல வொன்ற
வினைமாதர் தந்தம்வசைகூற
குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடிதான துன்ப மயல்தீர
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
குறைதீர வந்துகுறுகாயோ
மறிமா னுகந்த இறையோன் மகிழ்ந்து
வழிபாடு தந்தமதியாளா
மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
வடிவே லெறிந்தஅதிதீரா
அறிவா லறிந்து னிருதா ளிறைஞ்சு
மடியா ரிடைஞ்சல்களைவோனே
அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து
லைவா யுகந்தபெருமாளே
ஜோதிட படி, குடும்ப ஸ்தானமோ, களஸ்திர ஸ்தானமோ, பாவ கிரகங்களால் பார்க்கப்பட்டோ அல்லது அவற்றின் அமர்வினால் கெட்டு போய் இருந்தாலோ, சுக்கிரன் நீச்சம் மற்றும் குடும்ப ஸ்தான அதிபதி மறைவு ஸ்தானத்தில் இருந்தோலோ,நாக தோஷம் , களஸ்திர தோஷம், செவ்வாய் தோஷம் போன்ற தோஷங்கள் ஏற்பட்டு திருமண பொருத்தம் மற்றும் சரியான வரன் அமையாமல் திருமண தடை இருக்கலாம்.
இப்படி எந்த விதமான தோஷம் இருந்தாலும், அவற்றை நீக்கி திருமணம் விரைவில் நடைபெற உதவும் மந்திர சக்தி நிறைத்த பாடல், அருணகிரி நாதரால் பாடப்பெற்ற திருச்செந்தூர் திருப்புகழ் ஆகும். இந்த பாடல் திருமுருக கிருபானந்த வாரியாரால் சிபாரிசு செய்ய பட்டு நிறைய பேர் பலனடைந்துள்ளனர். இப்பாடலை முருகனை வேண்டி தினமும் ஆறு முறை என 48 நாட்கள் படித்து வந்தால், விரைவில் திருமணம் நடைபெறும். அவர்கள் வீட்டில் திருமண மேளம் கொட்டும் என்பதோடு மட்டுமல்லாமல், அமைய போகும் கணவனோ, மனைவியோ மிக சிறந்த பரிசாக அமையும் என்பது உண்மை ஆகும்.
இதையும் படிக்கலாமே