சிறந்த தமிழ் கவிதைகள் – கவிதைகள் தமிழில் – Kavithaigal in tamil

Kavithaigal in tamil

அகிம்சை

அகிம்சை என்பது இயலாமையின்

வெளிப்பாடு அல்ல…

அமைதியின் வெளிப்பாடு…

அன்பின் வெளிப்பாடு…

கருணையின் வெளிப்பாடு…

சகோதரவத்தின் வெளிப்பாடு…

ஒற்றுமையின் வெளிப்பாடு…

அடி

மூன்று அடியால்

உலகை அளந்தார் திருமால்

இரண்டே அடியால்

உலகை அளந்தார் திருவள்ளுவர்

அமுத சுரபி

கல்விக்குக் கண் கொடுத்து ஏழை , எளிய

மாணவர்களையும் படிக்கச் செய்தவர்……..

பல நலத்திட்டங்களை வகுத்து ஏழை, எளிய

மக்களையும் வாழச் செய்தவர்……..

என்றும் மக்கள் மனதில் வாழ்ந்து

கொண்டிருப்பவர் காமராசர்………

பசிப்பிணிப் போக்கிய அமுதசுரபி……

எளிமையின் சிகரம்……

அவரின் புகழ் ஒரு வரையறைக்குள்

வாராது….

அவரின் புகழ் பல யுகங்களைக்

கடந்து வாழும்…….

அந்த வானம் போல

முடிவில்லாமல்……

அம்மா

அம்மா என்னும் ஒற்றை உறவு

நமக்கான எல்லா உறவுகளையும்

சொல்லக்கொடுத்தவள்…

பத்து மாதம் நம்மைச் சுமந்த சுமைத்தாங்கி…

பிரசவ வேதனையை மறப்பாள் தன் பிள்ளையைப்

பார்த்தவுடன்…

தன் உதிரத்தை பாலாக்கித் தருவாள்…

தன் பசியை மறந்து பிள்ளையின் பசியாற்றுவாள்…

தனக்கென வாழாமல் பிள்ளைகளுக்காக

வாழும் ஓர் ஜீவன்…

இதை மறப்பாரும் உண்டோ?

இதை மறப்பவரும் உண்டோ? இவ்வுலகில்…

அரசியல் பிரவேசம் (காமராசர்)

காமராசரின் அரசியல் பிரவேசத்தை

நினைத்தால் இன்றும் நம் மனங்களில் பரவசம்…..

இனியொரு ஆட்சி வராதோ….

அந்த உத்தமரின் ஆட்சியைப் போல…

நாமெல்லம் தவம் செய்வோம்…

அந்த உத்தமரின் ஆட்சியைப் பெற….

அறுவடை

அதிர அடிச்சால் உதிர

விளையுமா

விளைந்தது பயிர்

அறுவடைக்கு முன்பே,

அழுகியது பயிர்கள்,

விடாது பெய்த கனமழையால்

தொடர் மழையால்

அடை மழையால்

அன்னை

அன்னை இந்த சொல்லை

அறியாத உயிர்கள் இவ்வுலகில் உளவோ!

அன்னை இந்த சொல்லின்

ஆழத்தை அறிந்துகொள்ளாத உயிர்கள் உளவோ!

அன்னை இந்த சொல்

கடலைவிட ஆழமானது

வானைவிட உயரமானது

மலையைவிட உறுதியானது

அன்னைக்கு ஈடானவன்

உணவைச் சமைத்து பசியைப்

போக்குபவள் தாய் என்றால்,

அந்த உணவுக்கு தேவையான

பயிரை விளைவித்தவன் தாயே

ஆட்சி

காமராசர்…

இவரின் ஒன்பது ஆண்டு ஆட்சியோ

செங்கோன்மையான ஆட்சி…

இவர் சென்ற பாதையோ நேர்மையான பாதை…

இவரின் வனப்புமிக்க தோற்றமோ எளிமையான

தோற்றம்…

இவரின் ஒளிபொருந்திய பார்வையோ கருணையான

பார்வை…

இவரின் வாயிலிருந்து உதிர்ந்த சொற்களோ உண்மையான சொற்கள்…         

  

ஆதாரம்

மரத்திலிருந்து இலைகள் உதிர்ந்தப்பின்பு ,

மரத்திருக்கும் இலைக்கும் தொடர்பு ஏதும்

இல்லையோ

இலையின் மூலமே மரந்தான் அதுபோல

நம் தாய்மொழியிலிருந்து பல மொழிகள்

பிரிந்து சென்று கிளைமொழிகளனாலும்,

அவற்றின் மூலமும், ஆதாரமும்

நம் தாய்மொழியே

ஆளுமை

பத்து ரூபாய் இருந்தால் மனம்

பஞ்சாய் பறக்கும்…..

கட்டு கட்டாய் பணம் இருந்தால் மனம்

கட்டுக்குள் வராது

மதிப்பிற்குரிய பதவியில் வகித்தபோது கூட

மனதைப் பூட்டி வைத்து,

பூட்டி வைத்த இதயத்திற்குள்

மக்களை வைத்தவர்……

பெருந்தலைவர் காமராசர்…..

இயற்கை

இயற்கை நமக்கு தெய்வம் கொடுத்த வரம்

இயற்கையில் கிடைத்த பழங்களில் மிகுந்துள்ளது

தரம்

நாம் அனைவரும் மரங்களை நட்டு வளர்ப்போம்

தெருவோரம்

மரங்கள் நமக்குத் மழைத்தந்து உதவக்கூடிய

கரம்

மரத்தை அழித்து மனைகள அமைப்பது அல்ல

வீரம்

இலக்கை நோக்கி

பின்னால் புறம் பேசுபவரைக்

கண்டு அஞ்சாதே…

அவர்களுக்கு உன் முன்னால் பேசத்

தையரியமில்லை…

முன்னால் வரும் இடையூறுகளைக்

கண்டு அஞ்சாதே

அவையாவும் பனித்துளிப் போல

விலகிவிடும்…

தனக்கானப் பாதையைத் தானே

வகுத்துக்கொள்ளும் ஆற்றைப்போல…

நீ உனக்கான பாதையை நோக்கி ஓடு… வெற்றி உன் வசம்…

உழவன்

உழுதவன் கணக்குப் பார்த்தால்

உழக்குக் கூட மிஞ்சாது

என்பது பழமொழி

அதனால் என்னவோ

உழவன் விலை  சொல்லும்

முன்னரே அனைத்து காய்கறிகளும்

விற்றுவிட்டன கால்விலையில்

        

எட்டாத கனி (காமராசர்)

கல்வி எமக்கு,

எட்டாத கனி,

ஏட்டு கனியாக,

இருந்த காலத்தில்……

அக்கனியைப் பறித்து,

எம்மைப் பசியாறச் செய்தவர்………

அக்கனியால் நாங்கள் இன்று,

ஆசிரியர்,

மருத்துவர்,

போலிஸ்,

மாவட்ட ஆட்சியர்,

விஞ்ஞானி ,

பொறியாளர் என்று

பல கனிகளை அறுவடைச் செய்தோம்…….

அக்கனிகள்  யாவும் உமது

பாதத்தில் சமர்ப்பணம்……..

எந்நாளோ?

விதை விதைத்தவன் விலையை தீர்மானிக்கும்

நாள் எந்நாளோ ?

களைப் பறித்தவன் கவலை இல்லாமல் உறங்கும்

நாள் எந்நாளோ?

நீர் பாய்ச்சியவன் கண்ணீர் இல்லாமல் இருக்கும்

நாள் எந்நாளோ?

உரம் போட்டவன் நிம்மதியாக இளைப்பாறும்

நாள எந்நாளோ?

அறுவடை செய்தவன் அரை வயிறு கஞ்சியாவது

குடிக்கும் நாள் எந்நாளோ?

விவசாயிகள் படும் துயர் நீங்கும்

நாள் எந்நாளோ?

இன்னும் எத்தனை நாள் இவ்வேதனை

பதில் சொல்ல யார்? வருவார்

எல்லையில்லா அன்பு

நரைத்த முடிகள்,

சுருங்கிய நுதல்,

குன்றிய பார்வை,

விழுந்த பற்கள்,

கூன் விழுந்த முதுகு,

தள்ளாடும் நடை,

எழுபதைத் தாண்டிய பிறகும்

குறையாத அன்பு,

தெவிட்டாத  அமுதைப் போன்றது

கட்டணம்

மழலைச் சொற்களை பேசும் பிஞ்சு குழந்தையை,

ஆரத் தன் நெஞ்சில் தழுவிக்கொண்டால் தாய்,

கண்ணா! ராசா பள்ளிக்குச் செல்! என்றாள்

பள்ளிக்குச் சென்றது குழந்தைப் படிப்பதற்காக

கட்டணம் கட்டவில்லை என்பதற்காக நாளெலெல்லாம் நின்றிருந்தது வகுப்பின் வெளியில்..

மாலை வேளையில் வீடு திரும்பியது குழந்தை

இன்று நீ என்ன கற்றுக்கொண்டாய் ?

என்று கேட்டாள் தாய்

இரண்டாம் வகுப்பில் ஔவைப் பாட்டு

என் வகுப்பில் பாரதியார் பாட்டு..

நான்காம் வகுப்பில் பாரதிதாசன் பாட்டு

என்றது குழந்தை

தாய் திகைப்புற

நான் வகுப்பில் உள்ளே இருந்திருந்தால்,

பாரதியார் பாட்டை மட்டும் கற்றிருப்பேன்

வகுப்பின் வெளியே நின்றதால்,

மூன்று பாடங்களையும் கற்றேன் என்றது குழந்தை

மகிழ்ச்சியாக

படிக்க ஆர்வம் மிகுந்த குழந்தைகள்

படிக்க வைக்க வசதியில்லாத குடும்பம்

அவர்களுக்கு அடைக்கலம்  தந்தது,அரசுப்பள்ளிகள்…

கட்டுக்கதை

போட்டி நிறைந்த வையகம் நமது…

வெறுமனே வெட்டிக் கதைகள் பேசி,

வாய் வலிக்க கட்டுக் கதைகள் பேசி,

சோற்றைத் தட்டு நிறைய உண்டு,

உண்ட மயக்கத்திலும், பிறரைத்

தீட்டி தீர்த்து வாழும் வாழ்க்கை ஏன்?

கலங்கரை விளக்கம்

இருபத்தைந்து வயதைத் தாண்டிய உடன்,

பெண்பிள்ளைகள் பாரங்களாக

தோன்றுவார்களோ!

பெண்பிள்ளைகளின் மன பாரங்களைத் நீங்கள்

அறிய முயன்றதுண்டோ?

ஆழியில் திசை அறியாமல் திணறும் கலங்களைப்

போன்றவர்கள் அவர்கள்

அவர்களுக்கு சரியான திசையைக் காட்டும்

கலங்கரை விளக்கமாக,

எப்போது மாறுவீர்கள்

கல்வியே தலை வணங்கும்

வறுமையில் வாடும் மாணவனும்

கல்வி கற்க,

இலவசக் கட்டாய கல்வித் திட்டம்…..

பசியின்றி கல்வி கற்க,

மதிய உணவுத் திட்டம்…….

உயர்வு, தாழ்வு இன்றி கல்வி கற்க,

பள்ளி சீருடைத் திட்டம்……

கல்வியே தலை வணங்கும்,

உம் போல் தலைமையைப் பார்த்து…….

காமராசரின் சொத்து

காமராசர்  முதலமைச்சர் பதவியில் வகித்தப்போது,

சேர்த்து வைத்த சொத்துகள்

மாடமாளிகை அல்ல……

கோடிக்கணக்கான பணங்கள் அல்ல……

நன்செய், புன்செய் நிலங்கள் அல்ல……

கண்ணைக் கவரும் நகைகள் அல்ல……

மாறாக……

மக்கள் மனதில் நீங்காத இடத்தை,

கோடிக்கணக்கான உள்ளங்களை,

தனதுஎளிமையால், உண்மையால், உழைப்பால்,

பெற்றார்…….

அவரே நமது அழியாத சொத்து…….

பாதுகாப்போம் அந்த பொக்கிஷத்தின் நினைவுகளை……

காமராசர்

பசியைப் போக்குபவள் தாய் என்றால்,

மாணவர்களின் பசியைப் போக்கிய

காமராசரும் தாயே…….

நற்பண்பைச் சொல்லிக்கொடுப்பவள் தந்தை என்றால்,

மாணவர்களை நல்வழிப்படுத்திய

காமராசரும் தந்தையே……..

கல்வியைக் கற்று கொடுப்பவர் ஆசிரியர்  என்றால்,

மாணவர்களுக்கு கல்வியைக் கொடுத்த

காமராசரும் ஆசிரியரே…….

நல்வழியில் நம்மை நடத்துபவர் கடவுள் என்றால்,

நமக்காக நலத்திட்டங்களை வழங்கிய

காமராசரும் கடவுளே…….

அட! ஓர் உருவில் தாய், தந்தை, ஆசிரியர், கடவுளைக்

காண வேண்டுமா?

காணுங்கள் காமராசரின் புகைப்படத்தை…….

போற்றுங்கள் அவரது புகழுரையை…..

சூடுங்கள் அவருக்கு மணிமகுடத்தை…..

ஏற்றுங்கள் அவரது நினைவை நமது உள்ளத்தில்…..

                                    .கீர்த்திகா., M.A.,M.phil.,N.E.T.,

இதையும் படிக்கலாமே

இயற்கை கவிதைகள் – Iyarkai kavithai in tamil

விழுதுகள் – Tamil kavithai

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top